Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் படுகை அணையிலிருந்து ராஜா வாய்க்காலுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு எவ்வித முன்னறிவிப்புமின்றி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பரமத்தி வேலூர், பொத்தனூர், நஞ்சை இடையாறு, பாலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலை, கோரை, வாழை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ராஜா வாய்க்காலில் உடனடியாக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கக் கோரி இளம் விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவதைக் கண்டித்து, இளம் விவசாயிகள் சங்கத் தலைவர் செளந்தர்ராஜன், விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறக்காத தமிழக அரசைக் கண்டித்து பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில் இறங்கி முழக்கங்களை எழுப்பி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்,
ராஜா வாய்க்காலை நம்பி வெற்றிலை, கரும்பு, கோரை உள்ளிட்ட பயிர்களை சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருவதாகவும், ஒவ்வொரு ஏக்கருக்கும் சுமார் ரூ.15 லட்சம் வரை செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தண்ணீர் திறக்கக் கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகள் உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வரும் திங்கள்கிழமை நாமக்கல்–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி வேலூர் பகுதியில் அனைத்து வாகனங்களையும் மறித்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam