Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவையைச் சேர்ந்த 29 வயதான ஜீவா முருகேசன், சாம்சங் நிறுவனத்தின் ‘தோஸ்த்’ விற்பனைப் பயிற்சி திட்டத்தின் மூலம் தனது தகவல் தொடர்பு மற்றும் வாடிக்கையாளர்களைக் கையாளும் திறனை வளர்த்துக்கொண்டு, இந்தியா முழுவதும் உள்ள 9,400-க்கும் மேற்பட்ட சாம்சங் தோஸ்த் விற்பனைப் பயிற்சியாளர்களில் சிறந்த 30 பேரில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குருகிராமில் உள்ள சாம்சங் இந்தியாவின் பிராந்திய தலைமையகத்தில் அவரது கற்றல் ஆர்வம் மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்காக சமீபத்தில் கௌரவிக்கப்பட்டார்.
ஒரு காலத்தில் வாடிக்கையாளர்களிடம் பேசுவதும், பொருட்களின் சிறப்பம்சங்களை விளக்குவதும் தனக்கு சவாலாக இருந்ததாகக் கூறும் ஜீவா, தோஸ்த் பயிற்சிக்குப் பிறகு பொருட்களைப் பற்றிய அறிவு, வாடிக்கையாளர்களிடம் தெளிவாகப் பேசுதல், பொருட்களைச் செய்து காட்டுதல் உள்ளிட்ட திறன்களை வளர்த்துக்கொண்டதாக தெரிவித்தார்.
இதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையுடன் பேசி விற்பனையை வெற்றிகரமாக முடிக்கத் தொடங்கியதாகவும், தற்போது தனது மேலாளர் தன்னை முழுமையாக நம்புவதாகவும் அவர் கூறினார்.
சாம்சங் இந்தியாவின் சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘சாம்சங் தோஸ்த்’, இளைஞர்களுக்கு வகுப்பறைப் பயிற்சியுடன் நேரடி ரீடைல் அனுபவத்தையும் வழங்குகிறது. வாடிக்கையாளர்களைக் கையாளுதல், பொருட்களை விளக்குதல் உள்ளிட்ட தொழில்துறைக்குத் தேவையான திறன்களை வளர்ப்பதன் மூலம் ரீடைல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வேலைவாய்ப்புக்கு இளைஞர்களைத் தயார்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 865 இளைஞர்களுக்கும், இந்தியா முழுவதும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தேசிய அளவில் சிறந்த 30 பயிற்சியாளர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய மின்னணுத் துறை திறன் கவுன்சில் மற்றும் தொலைத்தொடர்புத் துறை திறன் கவுன்சில் ஆகியவற்றுடன் இணைந்து வழங்கப்படும் இப்பயிற்சியின் முடிவில், தொழில்துறையால் அங்கீகரிக்கப்பட்ட NSQF தரச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்களிடம் பேசத் தயங்கிய நிலையில் இருந்து, இன்று அதிக தன்னம்பிக்கையுடன் செயல்படும் ரீடைல் விற்பனையாளராக ஜீவா முன்னேறியிருப்பது, திறன் பயிற்சிகள் இளைஞர்களின் தொழில் வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P