Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்களை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின் போது வழங்கி வரும் சிறந்த சேவைக்கான விருதுகள் இந்த ஆண்டும் முதலமைச்சரால் வழங்கப்பட்டுள்ளன.
இதில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் பெற்றுக் கொண்டார்.
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தியதற்காகவும், அவர்களின் உரிமைகளை பாதுகாத்து மறுவாழ்வு பணிகளை திறம்பட மேற்கொண்டதற்காகவும் இந்த அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கான விருதை அரசு புனர்வாழ்வு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் திருநாவுக்கரசு பெற்றார்.
அவரது தொடர் மருத்துவ சேவை மற்றும் மறுவாழ்வு சிகிச்சையில் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி இவ்விருது அளிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக செயல்படும் சிறந்த நிறுவனத்திற்கான விருதை திண்டிவனத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிருஷ்டி பவுண்டேஷன் பெற்றுள்ளது. அதேபோல் சிறந்த சமூகப் பணியாளருக்கான விருதை திருவண்ணாமலையைச் சேர்ந்த மணிமாறன் பெற்றார்.
மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியில் அமர்த்தி அவர்களுக்கு வாழ்வாதாரம் அளித்ததற்காக திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விருது வழங்கப்பட்டது.
குறிப்பாக சிறந்த சேவைக்கான விருதை திருப்பூரைச் சேர்ந்த எஸ்.சி.எம் கார்மெண்ட்ஸ் நிறுவனம் பெற்றது.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் உதவி வழங்கி அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவியதற்காக மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.
Hindusthan Samachar / vidya.b