Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டையில் 80-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் உலக வரலாற்றிலேயே ஆயுதம் இல்லாமல், அகிம்சை வழியில் நடத்தப்பட்ட மிகப்பெரிய போராட்டமாகும். மகாத்மா காந்தி அகிம்சை மூலமும் வெற்றி பெற முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தார். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.
சுதந்திரம் என்பது மனித வாழ்க்கையின் அடிப்படை. அதற்கு விலை நிர்ணயிக்க முடியாது. பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, நீலப் புரட்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு முந்தைய அரசுகள் முக்கிய பங்காற்றின.
32 மாதங்களில் சீரமைப்பு
தெலங்கானா மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கியதுடன், மாநிலத்தை சீரழிவான நிர்வாகத்தில் இருந்து வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கும் எங்கள் அரசு பாடுபட்டு வருகிறது.
தெலங்கானாவின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம்.
எங்கள் அரசு பொறுப்பேற்று 32 மாதங்கள் நிறைவடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட அரசு அமைப்புகளை ஒவ்வொன்றாக சீரமைத்து வருகிறோம். இதன் பலன்கள் தற்போது வெளிப்படத் தொடங்கியுள்ளன.
நலத்திட்டங்களை வெறும் பொருளாதார கணக்குகளின் அடிப்படையில் செயல்படுத்தாமல், மனிதநேயத்துடனும் ஏழை மக்களின் மீதான பொறுப்புணர்வுடனும் செயல்படுத்தி வருகிறோம்.
தனிநபர் வருமானம்
தெலங்கானாவின் தனிநபர் வருமானம் அதிகரித்திருப்பது அரசின் செயல்பாடுகளுக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. நாட்டின் சராசரி தனிநபர் வருமானத்தைவிட தெலங்கானாவின் தனிநபர் வருமானம் 91 சதவீதம் அதிகமாக உள்ளது.
விவசாயி நன்றாக இருந்தால்தான் மாநிலமும் நன்றாக இருக்கும் என்பதே எங்கள் அரசின் நம்பிக்கை. எனவே விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்னெடுத்து வருகிறோம்.
ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும்
சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நாம் எப்போதும் நினைவுகூர வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமையை பாதுகாப்பதுடன், ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து, தேசப்பற்று மற்றும் ஜனநாயக மதிப்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
சமத்துவமின்மை இல்லாத, அமைதி மற்றும் சகோதரத்துவம் நிறைந்த வலுவான ஜனநாயக இந்தியாவை உருவாக்குவதே சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
ஒவ்வொரு குடிமகனுக்கும் சமநீதி, சமத்துவம், சுதந்திரம் கிடைக்கும் வகையில் புதிய இந்தியாவை உருவாக்க அனைவரும் கடமை உணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும்.
இவ்வாறு முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA