Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற கொடுமைகள், மக்களைப் பிரித்து ஆட்சி செய்வதற்காக அவர்கள் மேற்கொண்ட ‘பிரித்து ஆட்சி செய்’ என்ற கொள்கை உள்ளிட்ட வரலாற்று நிகழ்வுகள் குறித்து இன்றைய தலைமுறையினர் முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று தெலங்கானா ரக்ஷண சேனா தலைவி கவிதா கூறினார்.
தெலங்கானா ரக்ஷண சேனா மாநில அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கவிதா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
“நமது வரலாற்றை சரியாக புரிந்து கொண்டவர்களால் மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்க முடியும். இரண்டு உலகப் போர்களிலும் இந்திய வீரர்களை ஆங்கிலேயர்கள் கட்டாயமாக பயன்படுத்தினர். இதனால் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.
ஆங்கிலேயர்கள் பின்பற்றிய கொள்கைகளால் இந்தியாவில் சாதி வேறுபாடுகள் மேலும் தீவிரமடைந்தன. காடுகளில் இயற்கையோடு அமைதியாக வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களை அரசு நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் அவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலும், அவர்களின் சிந்தனை மற்றும் மனப்பான்மை இன்னும் சமூகத்தில் சில இடங்களில் தொடர்வது வருத்தம் அளிக்கிறது. ஆங்கிலம் பேசுபவர்களே உயர்ந்தவர்கள் என்றும், தாய்மொழியான தெலுங்கு பேசுபவர்களை தாழ்வாக பார்ப்பதும் அடிமை மனப்பான்மையின் வெளிப்பாடாகும்.
தோலின் நிறத்தை அடிப்படையாக கொண்டு மக்களிடையே வேறுபாடு பார்க்கும் மனநிலையை நாம் கைவிட வேண்டும்.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் கொள்கைகளையும், அவர்களின் தியாகங்களையும் நினைவில் கொண்டு நாட்டின் ஒற்றுமை, சமத்துவம் மற்றும் முன்னேற்றத்திற்காக அனைவரும் பாடுபட வேண்டும்” என்று கவிதா கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA