திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
தூத்துக்குடி, 15 ஆகஸ்ட் (ஹி.ச.) தொடர் விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் சுமார் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம
திருச்செந்தூர் கோவில்


தூத்துக்குடி, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)

தொடர் விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பக்தர்கள் சுமார் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருவதால், நாளுக்கு நாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று சுதந்திர தினம் மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை என்பதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்தனர்.

இதையடுத்து இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடிய பக்தர்கள், தொடர்ந்து ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சுமார் 200 மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் வரிசையில் நின்று காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

பொது தரிசன வரிசையில் சுமார் 2 மணி நேரம் ஒரே இடத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதிப்பட்டதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர். விரைந்து தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முடி காணிக்கை செலுத்தவும், நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடவும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதற்காகவும் சுமார் 2 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால், கோவில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.

மேலும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருச்செந்தூர் நகருக்குள் வந்ததால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Hindusthan Samachar / GOKILA arumugam