Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமான புழல் ஏரியைப் பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரி பல ஆண்டுகளாகவே மாசுபாட்டு அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். அதிகாரிகளின் ஆய்வுகள், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், ஏரியின் அடிப்படைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டிலேயே புழல் ஏரியில் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்ததாகவும், விசாரணையில் ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டது பதிவானதுடன், ஒரு நிறுவனத்திற்கு ரூ.17.71 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுச்சூழல் இழப்பீடு விதிக்கப்பட்டதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு நீதித்துறை ஆவணத்தில் இடம்பெற்ற தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு அறிக்கையில்,
புழல் ஏரியில் சேகரிக்கப்பட்ட நீர் மாதிரியில் 100 மில்லிலிட்டருக்கு 93 என்ற அளவில் மலக்கழிவு கோலைபார்ம் பதிவாகியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 2026 பிப்ரவரியிலும் புழல் ஏரியில் மீண்டும் மலக்கழிவு கோலைபார்ம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், வெங்கடேஷ்வரா நகர், புதூர், பானு நகர், கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீர் வடிகால்கள் வழியாக ஏரியைச் சென்றடைவதாகவும், சக்தி நகர் பகுதியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஏரிக்குள் விடப்படுவதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“2017-ல் புகார், 2021-ல் மலக்கழிவு மாசுபாடு, 2026-ல் மீண்டும் அதே எச்சரிக்கை. அப்படியானால் கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எங்கே போயின?” என வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலக்கழிவால் மாசுபட்ட நீரால் பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், ஏரி நீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே குடிநீராக வழங்கப்படுவதால், தற்போது சென்னை மக்களின் குடிநீரில் நோய் பரவி வருவதாகக் கூறவில்லை என்றும், ஆனால் குடிநீரின் மூல ஆதாரத்திலேயே தொடர்ந்து மலக்கழிவு மாசுபாடு கண்டறியப்படுவது தீவிர எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒருபுறம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கழிவுநீர் ஏரிக்குள் செல்வதாக தெரிவிக்கிறது; மறுபுறம் சென்னை குடிநீர் வாரியம் அதை மறுப்பதாகவும், இந்த முரண்பாட்டில் பாதிக்கப்படுவது சென்னை மக்கள்தான் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
புழல் ஏரிக்குள் கழிவுநீர் செல்லும் அனைத்து வழித்தடங்களையும் உடனடியாகக் கண்டறிந்து நிரந்தரமாகத் தடுக்க வேண்டும், பாதாளச் சாக்கடை வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும், ஏரி நீரை தொடர்ந்து அறிவியல் முறையில் பரிசோதித்து முடிவுகளை மக்களுக்கு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், 2017 முதல் இதுவரை புழல் ஏரியைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், செலவிடப்பட்ட நிதி மற்றும் நிறைவேற்றப்படாத பணிகள் குறித்த விவரங்களை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும், ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோதக் கழிவுநீர் வெளியேற்றங்களைத் தடுத்து, நிரந்தரக் கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையின் உயிர்நாடியான புழல் ஏரியை கழிவுநீர் கால்வாயாக மாற்ற அனுமதிக்க முடியாது. மக்களுக்கு நோய் வந்த பிறகு தீர்வு காண்பது சரியல்ல; வருமுன் காப்பதே சரியானது” என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
புழல் ஏரியைப் பாதுகாக்க தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ