Enter your Email Address to subscribe to our newsletters

விஜயவாடா, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திர மாநிலத்தில் மெகா டி.எஸ்.சி. 2025 தேர்வில் தேர்வு செய்யப்பட்ட புதிய ஆசிரியர்கள், தங்களது நியமனங்கள் குறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தவறான பிரசாரம் செய்வதாக குற்றம்சாட்டி, விஜயவாடாவில் பிரமாண்டமான ‘ஆத்மகௌரவ பேரணி’ நடத்தினர்.
மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்திரா காந்தி முனிசிபல் மைதானத்தில் இருந்து தொடங்கிய பேரணி, அம்பேத்கர் ஸ்மிருதி வனம் வரை நடைபெற்றது.
பேரணி முழுவதும் ஆசிரியர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
‘தகுதி அடிப்படையிலேயே பணி’
பேரணியில் பங்கேற்ற ஆசிரியர்கள் கூறுகையில்,
பல ஆண்டுகளாக கடுமையாக படித்து, தேர்வில் தகுதி மற்றும் திறமை அடிப்படையிலேயே அரசு ஆசிரியர் பணியை பெற்றுள்ளோம். ஆனால் எங்களது நியமனங்கள் குறித்து சில அரசியல் கட்சியினர் தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
இதனால் எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் மன உளைச்சல் ஏற்படுகிறது என்றனர்.
மேலும், தங்களது திறமையை சந்தேகிக்கும் வகையிலும், நியமனங்கள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் நடைபெறும் பிரசாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
ஏற்கனவே கர்னூல், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இதுதொடர்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பின்னர், தங்களது நியமனங்கள் குறித்து அவதூறு பிரசாரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அம்பேத்கர் சிலைக்கு ஆசிரியர்கள் மனு அளித்தனர்.
தங்களது ‘ஆத்மகௌரவத்தை’ காயப்படுத்தும் வகையில் நடைபெறும் பிரசாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA