Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
காவிரி நீரை உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளின்படி கர்நாடகம் திறந்து விடுவதை உறுதி செய்யக் கோரி தமிழக அரசு மற்றும் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகின்றன.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பையும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் கர்நாடகம் முறையாகக் கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.
மேலும், நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் ஜூன் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்துக்கு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை உடனடியாக ஈடு செய்யும் வகையில், நிலுவையில் உள்ள நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, உரிய காலத்தில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் வழங்குவதை உறுதி செய்யக் கோரி திமுக சார்பிலும் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை அவசரமாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என தமிழக அரசு மற்றும் திமுக தரப்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்பு தனித்தனியாக முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, காவிரி தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி, நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனுக்கள் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் உரிய அளவில் திறக்க உத்தரவிடப்படுமா என்பது நாளைய விசாரணையில் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P