Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
சென்னையை அடுத்த எண்ணூர் அருகே கடலில் கலக்கும் இடத்திற்கு சற்று முன்பாக கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் அப்பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் செயல்பட்டு வரும் அனல் மின்நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் வேதிக்கழிவுகள் கடலில் கலக்கவிடப்பட்டது தான் இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கழிவுகளை வெளியேற்றிய நிறுவனங்களின் செயல்பாடுகளும், அதைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளின் அலட்சியமும் கண்டிக்கத்தக்கவை.
கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதக்கும் நிகழ்வுகள் ஏற்கனவே பலமுறை நிகழ்ந்துள்ளன.
ஆனாலும், இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க அரசும், அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை மன்னிக்க முடியாது.
இதே பகுதியில் உள்ள கன்னிகைப்பேர் பகுதியில் செயல்பட்டு வந்த கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 18 பேர் உயிரிழந்தனர்.
அதன் பிறகாவது சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விழித்துக் கொண்டிருந்தால் இத்தகைய நிகழ்வுகள் ஏற்பட்டிருக்காது.
எண்ணூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரங்களில் முதன்மையானது கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடிப்பது ஆகும்.
மீன்கள் செத்து மிதப்பதால் அடுத்த சில வாரங்களுக்கு அந்தப் பகுதியில் மீன் பிடிப்பது சாத்தியமல்ல.
இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதப்பது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
இதற்கு காரணமான நிறுவனங்களிடமிருந்து தண்டத் தொகை வசூலித்து மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றி அப்பகுதியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam