Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை எண்ணூர் கழிமுகம் அருகே கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மடவை, கிழங்கான், ஊடான், கார்வா, கௌத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களுடன் இறால், நண்டு உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும் உயிரிழந்துள்ளன. ஆற்றில் இரசாயனக் கழிவுகள் கலந்ததே மீன்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எண்ணூர் கழிமுகத்தைச் சுற்றியுள்ள பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இப்பகுதியை நம்பியே நீண்ட காலமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தொழிற்சாலைக் கழிவுகளால் மீன்வளம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அனல் மின் நிலையங்கள், எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளின் கழிவுகளால் கொசஸ்தலை ஆறும் எண்ணூர் கழிமுகமும் மாசடைந்துள்ள விவகாரம் ஏற்கெனவே அறிவியல் ரீதியாகவும் அதிகாரப்பூர்வமாகவும் நிறுவப்பட்டுள்ளதாக பூவுலகின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக விசாரணை நடத்தி, மீன்கள் உயிரிழந்ததற்கான காரணத்தை கண்டறிந்து, மாசுபாட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ