Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி, அண்ணாமலை தலைமையிலான 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில் பிரம்மாண்ட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி இன்று சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த பேரணி இன்று மாலை 3.30 மணிக்கு எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகில் இருந்து தொடங்குகிறது.
இதில் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைக்கிறார்.
மரங்களை வளர்ப்போம், நீர்நிலைகளை பாதுகாப்போம் என்ற மையக் கருத்தை முன்வைத்து இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு, குறைந்து வரும் பசுமை பரப்பு மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இது குறித்து அண்ணாமலை விடுத்துள்ள அழைப்பில்,
மண், நீர், காற்று ஆகிய மூன்றும் நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டிய மிகப்பெரிய பொக்கிஷங்கள் என்றும், அவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பேரணியில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேரணியில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும் இளைஞர்களுக்கும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் 'வீ த லீடர்ஸ்' தன்னார்வலர்கள் சென்னையில் குவிந்துள்ளதால், பேரணி வழித்தடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பேரணியில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்து நேரடியாக பங்கேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b