Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் தங்களது குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என வனத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் குத்தகை காலம் 2028-ல் முடிவடைய உள்ள நிலையில், கடந்த 2025 மே மாதம் தோட்ட நிலங்கள் முழுமையாக தமிழக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த நிலங்கள் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் முக்கிய வனப்பகுதிக்குள் வருவதால், அங்கு வசித்து வரும் தொழிலாளர்களை மறுகுடியமர்த்தம் செய்யும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களது குடியிருப்புகளை காலி செய்வதற்கு முன்பாக, தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
வீடுகள், நிலம், வாழ்வாதார உதவித்தொகை உள்ளிட்ட மறுவாழ்வு திட்டங்களை உரிய முறையில் பெற்றுக்கொண்டு, திட்டமிட்டபடி குடியிருப்புகளை காலி செய்யுமாறு தொடர்ந்து ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசின் நலத்திட்டங்களை ஏற்கனவே பெற்றுக் கொண்டவர்களின் விவரங்களை வனத்துறை பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.
மாஞ்சோலை நுழைவுப் பகுதியில் உள்ள வனத்துறை சோதனைச் சாவடியில், நலத்திட்ட உதவிகளை பெற்ற 286 தொழிலாளர்களின் பெயர் பட்டியல் விளம்பரப் பதாகையாக வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மற்ற தொழிலாளர்களும் அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b