போதைப்பொருள் புழக்கத்தால் திருவொற்றியூரில் +2 மாணவன் கொலை - போதைப்பொருள் புழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் ஜி.கே.வாசன்
சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச) சென்னை திருவொற்றியூரில் அரசுப் பள்ளி அருகே +2 மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள
GK Vasan


சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச)

சென்னை திருவொற்றியூரில் அரசுப் பள்ளி அருகே +2 மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது,

போதைப்பொருள் பயன்படுத்தியவர்களை எதிர்த்து கேள்வி எழுப்பியதால் மாணவன் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி கொலைக்கான காரணத்தை கண்டறிய வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கோவையிலும் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களால் கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள ஜி.கே.வாசன், மாணவர்கள் கொலை செய்யப்படுவதற்கு போதைப்பொருள் புழக்கம் முக்கிய காரணமாக இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது என தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் ஒழுங்கை மேலும் கடுமையாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும் மாணவர்களிடமும் போதைப்பொருட்களை விற்பனை செய்வது மற்றும் வாங்குவதை முழுமையாகத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போதைப்பொருள் பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ