சுதந்திர தின சிறப்பு ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் நிகழ்வு
புதுடெல்லி, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவால் கடந்த 2024 டிசம்பரில் தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் திட்டம், இந்திய விளையாட்டு ஆணையம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால், இ
Independence Day Special 'Fit India Sundays on Cycle' Event


புதுடெல்லி, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவால் கடந்த 2024 டிசம்பரில் தொடங்கப்பட்ட ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் திட்டம், இந்திய விளையாட்டு ஆணையம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால், இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, இந்தியன் ரோப் ஸ்கிப்பிங் கூட்டமைப்பு, யோகாசன பாரத், ராஹ்கிரி அறக்கட்டளை, மை பைக்ஸ் மற்றும் மை பாரத் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்படுகிறது.

இந்த சைக்கிள் திட்டம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல மையங்கள், தேசிய சிறப்பு மையங்கள், பயிற்சி மையங்கள், கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள் மற்றும் கேலோ இந்தியா மையங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஃபிட் இந்தியா சண்டேஸ் ஆன் சைக்கிள் நிகழ்வின் சிறப்பு பதிப்பு இன்று ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்த சைக்கிள் பயண விழிப்புணர்வு நிகழ்வில் விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்தகுதி ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட குத்துச்சண்டை வீராங்கனை பூனம் பிஷ்ட், சைக்கிள் ஓட்டுதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

சைக்கிள் ஓட்டுவது குறைந்த செலவில், மாசு இல்லாத உடற்தகுதியை பேணும் சிறந்த வழிகளில் ஒன்று என்பதால் இது ஒரு சிறந்த முயற்சி. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் எளிதாக சைக்கிள் ஓட்டுதலை மேற்கொள்ள முடியும். ஒவ்வொரு தனிநபரும் உடற்தகுதியுடன் இருப்பதற்கான பொறுப்பை ஏற்கும்போதுதான் ஃபிட் இந்தியா இயக்கம் உண்மையான பலனைத் தரும் என்று கூறினார்.

ஸ்குவாஷ் வீராங்கனை யுஷா நஃபீஸும் இந்நிகழ்வில் பங்கேற்றார். அவர் கூறுகையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் தொடர்ந்து சைக்கிள் ஓட்டி வருகிறேன், எனவே இந்த முயற்சியில் பங்கேற்பது மிகவும் நன்றாக இருக்கிறது. நாடு முழுவதும் உடற்தகுதியை ஊக்குவிக்க அரசு சிறப்பான முயற்சியை மேற்கொண்டுள்ளது. அனைவரும் முன்வந்து பங்கேற்று, தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்று நான் ஊக்குவிக்கிறேன் என்றார்.

தனது ஐந்தாவது சண்டேஸ் ஆன் சைக்கிள் நிகழ்வில் கலந்து கொண்ட மல்யுத்த வீராங்கனை சிவானி பவார், அன்றாட வாழ்க்கையில் உடற்தகுதியை இணைத்துக்கொள்வதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

குறிப்பாக வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கும், நீண்ட நேரம் வீட்டுக்குள்ளேயே இருப்பவர்களுக்கும் இது போன்ற முயற்சிகள் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் இளைஞர்கள் சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதைக் குறைத்து, உடல் தகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / vidya.b