கர்நாடக வனத்துறையினர் தமிழர்கள் மூன்று பேரை சுட்டுக்கொலை - ஜவாஹிருல்லா கடும் கண்டனம்
சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் மற்றும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஹெச். ஜவாஹ
Jawahirulla


சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

கர்நாடக மாநிலம் சாம்ராஜநகர் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் மற்றும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா கண்டன கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சாம்ராஜநகர் மாவட்டத்தில் கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் வேட்டையில் ஈடுபட்டதாகவும், அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததாகவும் கர்நாடக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் வேட்டையாடச் செல்லவில்லை என்றும், அவர்கள் அப்பாவிகள் என்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் பொதுமக்களும் தெரிவித்து வருவதாக ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.

எவ்வளவு பெரிய குற்றத்தை ஒருவர் செய்திருந்தாலும், அவரை கைது செய்து சட்டப்படி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உரிய விசாரணைக்குப் பிறகு தண்டனை பெற்றுத் தருவதே சட்டத்தின் நடைமுறை. மாறாக, மோதல் என்ற பெயரில் உயிரிழப்பை ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்வதாகவும் எம்.ஹெச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ