மத்திய பிரதேசத்தில் மானிய உரங்கள் விற்பனைக்கு திடீர் தடை
போபால் , 16 ஆகஸ்ட் (ஹி.ச.) மத்தியபிரதேசத்தில் மானிய விலையில் வழங்கப்படும் உரங்களின் விற்பனைக்கு மாநில அரசு திடீரென இடைக்காலத் தடை விதித்துள்ளது. காரீஃப் சாகுபடி பருவம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தடை விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி
A


போபால் , 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

மத்தியபிரதேசத்தில் மானிய விலையில் வழங்கப்படும் உரங்களின் விற்பனைக்கு மாநில அரசு திடீரென இடைக்காலத் தடை விதித்துள்ளது.

காரீஃப் சாகுபடி பருவம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தடை விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் iFMS

(Integrated Fertilizer Management System) இணையதளத்தில் பதிவாகியுள்ள உர இருப்புக்கும், விற்பனையாளர்களிடம் உள்ள உண்மையான உரக் கையிருப்புக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை கண்டறிந்து சரிபார்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 14-ந் தேதி மாலை 7 மணி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.

மாநில மார்க்கெட்டிங் பெடரேஷன் மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், எம்.பி. அக்ரோ மையங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் என அனைத்து விநியோக மையங்களிலும் உர விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் கவலை

நெல், பருப்பு உள்ளிட்ட காரீஃப் பயிர்களுக்கு உரம் இட வேண்டிய முக்கியமான நேரத்தில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால், பயிர் விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.

மேலும், உர விற்பனைக்கு ஏற்பட்டுள்ள இடைக்காலத் தடையை பயன்படுத்தி சிலர் உரங்களை பதுக்கி வைத்து, கருப்பு சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடும் என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசின் இந்த முடிவால் சுமார் 82 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் உர விற்பனையை உடனடியாக சீரமைத்து, விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

காங்கிரஸ் எதிர்ப்பு

உர விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உர விநியோகத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் எச்சரித்துள்ளது.

நாளை முதல் விற்பனை

இதற்கிடையே, மாநிலத்தில் போதுமான அளவு உரம் கையிருப்பில் இருப்பதாகவும், விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

iFMS பதிவுகள் மற்றும் களத்தில் உள்ள உர இருப்பு விவரங்களை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்ததும், ஆகஸ்டு 17-ந் தேதி முதல் மானிய உரங்களின் விற்பனை மீண்டும் வழக்கம்போல் தொடங்கும் என்று வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA