Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தின் காரணாமாக அந்த வளாகத்தில் இயங்கி வந்த மாருதி சுசுகி இருசக்கர வாகன ஷோரூமில் திடீரென தீப்பிடித்துள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷோரூமில் உள்ள வாகனங்கள், உதிரி பாகங்கள் மற்றும் அலுவலக பொருட்கள் என அனைத்தும் தீயில் சிக்கியதால், தீ மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கு பரவத் தொடங்கியது.
குறுகிய நேரத்தில் தீயின் வேகம் அதிகரித்ததால், ஷோரூம் அமைந்திருந்த வணிக வளாகம் முழுவதும் தீ பரவியது. இதே வளாகத்தில் இயங்கி வந்த தனியார் வங்கி ஒன்றும் தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கியின் உள்ளே இருந்த ஆவணங்கள் மற்றும் கணினி உபகரணங்கள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி தீயணைப்பு துறையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவியது. தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து தீயணைப்பு துறையினரும், காவல் துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b