Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
விடுதலை திருநாள் உரையில் பிரதமர் நரேந்திர மோடி, “நக்சல் மனநிலை கொண்டவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்” எனக் கூறியதற்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் மற்றும் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள், அரசியல் கருத்து வேறுபாடு கொண்டவர்கள், சமூக அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் என அனைவரையும் “நக்சல் மனநிலை” கொண்டவர்கள் என முத்திரை குத்துவது ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையே கேள்விக்குள்ளாக்கும் என தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியாகப் போராடும் உரிமையை சுட்டிக்காட்டிய ஜவாஹிருல்லா, அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பது தேச விரோதமோ, நக்சலிசமோ அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியல் எதிரிகள், மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளை ஒரே வார்த்தையில் சந்தேகத்திற்குரியவர்களாக சித்தரிப்பது ஆபத்தான போக்கு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
“தேச விரோதி”, “நகர்ப்புற நக்சல்” போன்ற சொற்கள் கடந்த காலங்களில் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களை மிரட்ட பயன்படுத்தப்பட்டதாகக் கூறிய அவர், பிரதமரே இதுபோன்ற சொற்களை பயன்படுத்துவது விமர்சனக் குரல்களை ஒடுக்குவதற்கான அரசியல் சூழலை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
நக்சலிசத்தை எதிர்ப்பதற்கும் ஜனநாயக ரீதியான கருத்து வேறுபாடுகளை எதிர்ப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளதாகக் கூறிய ஜவாஹிருல்லா, அந்த அடிப்படை வேறுபாட்டை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் பல்வகைத் தன்மை, கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை, சமூகநீதி மற்றும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, பிரதமர் நரேந்திர மோடி தனது பொறுப்பற்ற கருத்தை திரும்பப் பெறுவதுடன், ஜனநாயக ரீதியாக அரசை விமர்சிக்கும் மக்களின் உரிமையை மதிக்க வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
“ஜனநாயகத்தில் ஆட்சியாளர்களை கேள்வி கேட்பது குற்றமல்ல,கேள்வி கேட்கும் உரிமையைப் பாதுகாப்பதே உண்மையான தேசப்பற்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam