Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT), உருவாக்கிய அலை ஆற்றலில் இயங்கும் செங்குத்து கடல் அளவீட்டுக் கருவி சென்னை கடல் பகுதியில் வெற்றிகரமாகச் சோதித்து பார்க்கப்பட்டது.
பேட்டரி அல்லது எரிபொருள் இல்லாமல், முழுக்க முழுக்க கடல் அலைகளின் ஆற்றலை மட்டுமே கொண்டு இயங்கும் இந்தியாவின் முதல் செங்குத்து கடல் அளவீட்டுக் கருவி
(Wire Walker) இது ஆகும்.
இந்த கருவி வாயிலாக 500 முதல் 3 ஆயிரம் மீட்டர் வரையிலான ஆழத்தில் உள்ள கடல் சார்ந்த விவரங்களைச் சேகரிக்க முடியும் என தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் பாலாஜி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும், நூற்றுக்கும் அதிகமான கடல் சார்ந்த விவரங்களை இந்த கருவியைக் கொண்டு சேகரித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பேரிடர்களை துல்லியமாக கணித்து, பெரும் ஆபத்துகளில் இருந்து பொதுமக்களைக் காக்கும் பொருட்டு புதிய தொழில்நுட்பங்களை இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கி வருகிறது.
இதன் அடிப்படையிலேயே தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் இந்த கடல் அலை ஆற்றலில் செங்குத்தாக இயங்கும் அளவீட்டுக் கருவியை உருவாக்கியுள்ளது.
இந்த கருவி கடல் சார்ந்த தகவல்களை சேகரித்து முன்கூட்டியே வழங்குவதனால் எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் இயற்கை பேரிடர்களை அறிந்துக் கொள்ள முடியும்.
இதுகுறித்து தேசியப் பெருங்கடல் தொழில்நுட்ப நிறுனத்தின் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில்,
கடல் கண்காணிப்பு மற்றும் கடலோர செயல்முறைகளுக்கான தரவுகளை பெறுவதற்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதே இந்த கடல் அலையால் செயல்படும் செங்குத்து தரவு சேகரிப்பு (WVP) கருவி ஆகும். இது தற்போது சோதனையிலும் வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக இந்த கருவியின் இயக்கம் குறித்து சென்னை கடல் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் சோதனை செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து சில தேவையான மாற்றங்கள் அக்கருவில் மேற்கொள்ளப்பட்டு பின்னர் மீண்டும் ஆய்வு செய்தோம். 500 மீட்டர் முதல் 3 ஆயிரம் மீட்டர் வரையிலான ஆழ்கடல் பகுதியில் உள்ள கடல் நீரின் தன்மை குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டன.
அப்போது, வெற்றிகரமாக செயல்பட்டு துல்லியமான தரவுகளை அது வழங்கியது என்றார்.
தொடர்ந்து செங்குத்து தரவு சேகரிப்பு கருவியின் செயல்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வரும் மிதவைகளில், கடலின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பொருட்டு 10 சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
இவை கடல் மட்டத்தின் கீழ் முதல் 500 மீட்டர் வரையில் தரவுகளைப் பெற்று வழங்கும். ஆனால், புதிய செங்குத்து தரவு சேகரிப்பு (WVP) கருவியில் 12 சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
மேலும், கடல் அலையின் திறனை பயன்படுத்தி மேலும், கீழுமாக செல்லும் வகையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆகையால், கடலின் மேல் மட்டத்தில் இருந்து கீழே சென்று, குறிப்பிட்ட தூரத்திற்கு பின்னர் மீண்டும் மேலே வந்துவிடும். அதன் பின்னர் மீண்டும் அது கீழே செல்லும்.
இவ்வாறு தொடர்ச்சியாக இயங்கி கடல் அலையின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை அது சேகரிக்கும்.
அத்துடன், இந்த கருவியின் சென்சார், கேமிரா போன்றவற்றை பயன்படுத்தி அண்மையில் சென்னை கடல்பரப்பில் சோதனை மேற்கொண்டபோது, 30 மீட்டர் வரையிலான ஆழத்தில் 334 முறை கடல் சார்ந்த தரவுகள் சேகரிக்கப்பட்டன.
இந்த சோதனை முடிவுகள் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் சிறந்த செயல்பாடு, நம்பகத்தன்மை மற்றும் உறுதி தன்மையை நிரூபிக்கும் வகையில் அமைந்தன.
மேலும், இந்தியாவின் பெருங்கடல் கண்காணிப்பு மற்றும் தன்னாட்சி கடல்சார் தொழில்நுட்பத் திறன்களில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் இது அமைந்துள்ளது.
இதையடுத்து, அடுத்த கட்டமாக இந்த கருவி சேகரிக்கும் தரவுகளை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை செயற்கைக் கோள் வழியாக தானாகவே தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு அனுப்பும் வகையில் வடிவமைத்து செயல்படுத்த உள்ளோம் என்றார்.
Hindusthan Samachar / ANANDHAN