Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
மேகமலை புலிகள் காப்பகம் தொடர்பான விவகாரத்தில், வனப்பகுதிக்குள் அமைந்துள்ள 98 மலை கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களை அப்புறப்படுத்தும் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மயிலாடும்பாறை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை முதல் மயிலாடும்பாறை, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், டீக்கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கடைகளை அடைத்த வணிகர்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக உள்ள மலை கிராம மக்களை வெளியேற்றினால் தங்கள் வணிகம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், பூர்வீகமாக வாழும் மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.
மேகமலை புலிகள் காப்பக வரையறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மலை கிராம மக்களை வெளியேற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
Hindusthan Samachar / vidya.b