Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
அம்பத்தூர் அடுத்த பாடியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு படவட்டம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, 1008 பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அறங்காவலர் குழுத் தலைவர் உமா மோகன் தலைமையில், பாடி சிவன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் தொடங்கியது. மேளதாளங்கள் முழங்க, “ஓம் சக்தி பராசக்தி” என பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்து படவட்டம்மன் கோவிலை அடைந்தனர்.
தொடர்ந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அலகு குத்துதல், தீச்சட்டி ஏந்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பக்தர்கள் “அரோகரா... அரோகரா...” என கோஷமிட்டதால் கோவில் வளாகம் பக்தி பரவசத்துடன் காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
விழாவையொட்டி கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 2 ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு படவட்டம்மனை வழிபட்டு அருளாசி பெற்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam