பழனி கோயிலில் வார விடுமுறையை முன்னிட்டு குவியும் பக்தர்கள் - ரோப்கார் சேவை ரத்தால் காத்திருந்து தரிசனம்
திண்டுக்கல், 16 ஆகஸ்ட் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினமான இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழகத
Palani Murugan Temple


திண்டுக்கல், 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினமான இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த ஏராளமான பக்தர்களால் பழனி அடிவாரப் பகுதியில் உள்ள கிரிவீதிகள், சன்னதி வீதிகள் மற்றும் யானைப் பாதை ஆகியவற்றில் கூட்டம் அதிகமிருந்தது.

மலைக்கோயிலுக்குச் செல்லும் ரோப்கார் சேவை வருடாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், மின் இழுவை ரயில் (வின்ச்) சேவையைப் பயன்படுத்த முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மலைக்குச் செல்கின்றனர்.

பொதுத் தரிசன வழிகளிலும் கூட்டம் நிலவியதால், பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து தண்டாயுதபாணி சுவாமியைத் தரிசனம் செய்து, தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, மலைக்கோயிலில் நெரிசலைக் குறைக்கும் வகையில் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோயிலுக்குச் செல்ல தற்காலிக ஒருவழிப்பாதை திறக்கப்பட்டு, கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும், பக்தர்களின் பாதுகாப்பான தரிசனத்தை உறுதி செய்ய அடிவாரம் காவல்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN