சிவகாசியில் பட்டாசுத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி தி.மு.க ஆர்ப்பாட்டம்
விருதுநகர், 16 ஆகஸ்ட் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய வாழ்வாதாரத் தொழிலாக விளங்கும் பட்டாசுத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பட்டாசு ஆலைகளில் நடைபெறும் ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகளை கண்டித்தும் சிவகாசியில் திமுக சார்பில் இன்று மாபெரும்
ஆர்ப்பாட்டம்


விருதுநகர், 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய வாழ்வாதாரத் தொழிலாக விளங்கும் பட்டாசுத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பட்டாசு ஆலைகளில் நடைபெறும் ஆய்வுகள் மற்றும் நடவடிக்கைகளை கண்டித்தும் சிவகாசியில் திமுக சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சிவகாசி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் மற்றும் மாவட்ட திமுக செயலாளர் தங்கம் தென்னரசு தலைமை வகித்தார்.

திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பட்டாசுத் தொழிலாளர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு உற்பத்தித் தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர்.

திமுக தரப்பின் தகவலின்படி, இந்தத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் தொழிலாகவும் இது உள்ளது.

குறிப்பாக, சிறிய பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.

உரிமம் பெற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும் ஆலைகளிலும், விற்பனை நிலையங்களிலும் ‘ஆய்வு’ என்ற பெயரில் அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொழிலாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதனிடையே, சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி புதிய இயந்திரத்தை சோதனை செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டாசுத் தொழிலில் பாதுகாப்பு விதிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும், விதிமுறைகளைப் பின்பற்றி உரிமம் பெற்று இயங்கும் ஆலைகளை முடக்கும் வகையில் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் தொழிலின் தொடர்ச்சியையும் அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில், “பட்டாசுத் தொழிலை பாதுகாக்க வேண்டும்”, “தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்”, ஆய்வு என்ற பெயரில் தொழிலை முடக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுகவினரும் தொழிலாளர்களும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

வரும் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரிக்கும் காலகட்டத்தில் ஆலைகள் தொடர்பான நடவடிக்கைகள் தொழில்துறையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இந்தப் போராட்டம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam