Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு முழுவதும் குடற்புழு தொற்றை ஒழிக்கும் நோக்கில், நாளை மாபெரும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முகாமில், மாநிலம் முழுவதும் உள்ள 54,481 அங்கன்வாடி மையங்கள், 11,723 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 56,483 பள்ளிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.
இந்த சிறப்பு முகாமில் 1 முதல் 19 வயது வரையிலான 2.06 கோடி குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயது வரையிலான 52.44 லட்சம் பேர் என மொத்தம் சுமார் இரண்டரை கோடிக்கும் மேற்பட்டோருக்கு குடற்புழு தடுப்பு மாத்திரை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட முகாமில் பங்கேற்க முடியாமல் விடுபட்டவர்களுக்கு நாளை நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் மாத்திரைகள் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
குடற்புழு தொற்று காரணமாக ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையை தடுக்கும் பொருட்டு, அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பு மாத்திரையை உட்கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b