Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
வார விடுமுறையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.
திருமலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இலவசமான சர்வ தரிசனத்திற்காக பக்தர்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
அதிகாலை முதல் நள்ளிரவு வரை வரிசை குறையாமல் நீண்டு கொண்டே செல்கிறது. சுமார் 24 மணி நேரம் வரை காத்திருந்த பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடிகிறது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் தரிசனம் செய்ய 20 முதல் 22 மணி நேரம் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
வைகுண்டம் காத்திருப்பு அறைகள் அனைத்தும் முழுமையாக நிரம்பி வழிவதால், தரிசன வரிசையானது வெளிப்புறத்தில் அக்டோபஸ் வட்டம் வரை நீண்ட தூரத்திற்கு நீண்டுள்ளது.
நேரக் குறியீடு இடப்பட்ட இலவச தரிசன (SSD) டோக்கன் பெற்றவர்கள் 5 முதல் 7 மணி நேரத்திலும், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்றவர்கள் 3 முதல் 5 மணி நேரத்திலும் தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று சுமார் 3 லட்சம் பேருக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டதோடு, 4.60 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன.
இதேபோல் மலைப்பாதையில் பக்தர்களின் வாகனங்களும் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.
குறிப்பாக மலையடிவாரத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க தேவஸ்தான நிர்வாகம் தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
தரிசன வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதால், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் தேவையான குடிநீர், பால் மற்றும் அத்தியாவசிய மருந்துகளைக் கைகளில் தயாராக வைத்திருக்க திருமலா திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b