Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெலங்கானா ராஷ்டிர சேனா கட்சியின் தலைவி கவிதா, தனது வாழ்நாள் முழுவதும் பிஆர்எஸ் கட்சியுடன் இணைந்து செயல்படப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஊடகப் பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“என் உயிர் உள்ளவரை பிஆர்எஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட மாட்டேன். குடும்ப உறவுகள் வேறு; அரசியல் உறவுகள் வேறு. எனவே, குடும்ப உறுப்பினர்களுடனான தனிப்பட்ட உறவுகளை அரசியலுடன் தொடர்புபடுத்த விரும்பவில்லை. அதே நேரத்தில், பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் எங்களது கொள்கை என்று கூற முடியாது.
என்னை கட்சியில் இருந்து நீக்கிய விதம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. எந்தவித விளக்கம் கேட்கும் நோட்டீசும் வழங்காமல் என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டனர். அதற்கு முன்பே சுமார் ஒரு ஆண்டாக என்னை அரசியல் ரீதியாக ஒதுக்கி வைத்திருந்தனர்.
இருந்தபோதிலும், நெறிமுறைகளுக்கு மதிப்பளித்து நான் எம்.எல்.சி. பதவியை தானாகவே ராஜினாமா செய்தேன். எனது தந்தை கே.சந்திரசேகர் ராவை நான் ஒருபோதும் எதிர்த்ததில்லை.
எனது புதிய கட்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவோம். எங்கள் கட்சி ஆர்ட் படம் அல்ல; கமர்ஷியல் படம். நான் வெற்றி பெறாவிட்டால் வேறு யார் வெற்றி பெறுவார்கள் என்று தெரியவில்லை. எனது தந்தை கேசிஆர் புதிய வரலாற்றை உருவாக்கியதைப் போல நானும் புதிய வரலாற்றை உருவாக்குவேன்.
சமூகநீதி மற்றும் மதச்சார்பின்மையே எங்கள் கட்சியின் முக்கிய கொள்கைகள். பி.சி., எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினரை அரசியல் கட்சிகள் வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துகின்றன. பி.சி. மக்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக டெல்லியில் போராட்டம் நடத்துவோம்.
தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பி.சி. மக்களின் நலனில் போதிய கவனம் செலுத்தவில்லை.
அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது. எங்கள் கட்சி தொடங்கப்பட்ட 100 நாட்களுக்குள் 42 சட்டமன்ற தொகுதிகளில் கட்சி குழுக்கள் அமைக்கும் பணியை முடித்துள்ளோம்.”இவ்வாறு கவிதா கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA