வார விடுமுறையை முன்னிட்டு குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தென்காசி, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாகக் தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தளமான குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சிறப்பாக உள்ளது. மெயின் அருவியில், மனதை மயக்கும
வார விடுமுறையை முன்னிட்டு  குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தென்காசி, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாகக் தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தளமான குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து சிறப்பாக உள்ளது.

மெயின் அருவியில், மனதை மயக்கும் வகையில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஐந்தருவி ஐந்து கிளைகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. பழைய குற்றாலம், புலி அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது.

தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் குற்றாலத்திற்கு வருகை தந்தனர்.

மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலத்தில் கூட்டம் அலைமோதியதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பயணிகள் வரிசையில் நின்று குளிக்குமாறு காவல் துறையினர் அறிவுறுத்தித் தீவிரமாகக் கண்காணித்தனர்.

நேற்று காலையில் மிதமான வெயில் அடித்த போதிலும், மாலையில் குளிர்ந்த தென்றல் காற்று வீசியதால் குற்றாலத்தில் இதமான சூழல் நிலவியது. இன்றும்

(ஆகஸ்ட் 16) சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரித்துக் காணப்படுகிறது.

கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் ஐந்தருவி, மெயின் அருவி பழைய குற்றால அருவிகளில் நீண்ட வரிசையில் நின்று குளித்து மகிழ்ந்தனர்.

அருவிகளில் குளித்த சுற்றுலா பயணிகள் அருவிக்கரை பகுதியில் உள்ள கடைகளில் தேநீர், தின்பண்டங்களை வாங்கி ருசித்தனர்.

இதனால் கடைகளிலும் வியாபாரம் சூடுபிடித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Hindusthan Samachar / vidya.b