100 நாட்களில் ஒரு சாதனையைக்கூட சொல்ல முடியவில்லை -த.வெ.க அரசை விமர்சித்த துரைமுருகன்
வேலூர், 16 ஆகஸ்ட் (ஹி.ச.) வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தவெக அரசு 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், “100 நாட்களில் இமயமலை அளவுக்கு சாதனை செய்ய முடியாது என்றாலும், ஒரு குன்று அளவிற்காவ
துரைமுருகன்


வேலூர், 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்,

தவெக அரசு 100 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், “100 நாட்களில் இமயமலை அளவுக்கு சாதனை செய்ய முடியாது என்றாலும், ஒரு குன்று அளவிற்காவது சாதனை செய்தோம் என ஒன்றைக்கூட சொல்ல முடியவில்லை. பேசிக்கொண்டிருக்கிறார்களே தவிர, எந்தக் காரியத்திலும் இறங்கவில்லை. தேர்தல் வாக்குறுதிகளின் பக்கமே செல்லவில்லை” என விமர்சித்தார்.

திமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த உறவும் இல்லை என்றும், கொள்கை ரீதியாக இரு கட்சிகளும் வேறுபட்டவை என்றும் கூறிய அவர், பாஜகவுடன் ஒத்துப்போவதாக கூறுபவர்கள் யார், அவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை அவர்களின் பேச்சே வெளிப்படுத்துவதாக தெரிவித்தார். நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கேட்கப்பட்டபோது, “அவர் மீது கை வைத்தால் மத்திய அரசு இந்த ஆட்சியை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வந்துவிடும்” என துரைமுருகன் கூறினார்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், பத்திரிகையைப் புரட்டினால் கொலை, பாலியல் வன்கொடுமை செய்திகள் நிறைந்து கிடப்பதாகவும், காட்பாடியில் அண்மையில் மட்டும் மூன்று கொலைகள் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

காவிரி நீர் விவகாரம் குறித்துப் பேசிய துரைமுருகன், கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை அடையும்போது குறைவதாகவும், கர்நாடகப் பகுதியில் நீர் திருட்டு நடைபெறுகிறதா என்பதை அம்மாநில அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார். தமிழகத்திற்கு உரிய நீரை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்றும், காவிரி டெல்டா பகுதிகள் வறண்டு போகும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

மேலும், எம்ஜிஆர் இருந்திருந்தால் அதிமுக இன்றைய நிலைக்கு வந்திருக்காது என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P