ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் திருப்பம் - சி.பி.ஐ மறு வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடக்கம்
சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.) கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சென்னை செம்பியம் காவல்துறையி
Twist in Armstrong murder case


சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)

கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக சென்னை செம்பியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ரவுடி நாகேந்திரன், அவரது மகன் உள்ளிட்ட 27 பேரை கைது செய்தனர்.

இந்தக் கொலையின் பின்னணியில் அரசியல் தொடர்பு இருப்பதாகக் கூறி, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விசாரணையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உத்தரவிட்டிருந்தது.

தமிழக அரசும் சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, தடை நீங்கியது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, சிபிஐ-யின் சிறப்பு குற்றப்பிரிவினர் தற்போது இந்த வழக்கை மறு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை காவல்துறையிடம் இருந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெற்று, கொலையின் பின்னணி, சதித்திட்டம் மற்றும் அரசியல் தொடர்புகள் குறித்து முழுமையான விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b