Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குட்பட்ட கடையம் வனச்சரகத்தில் மிளாவை வேட்டையாடி, அதனை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் பதிவிட்டதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடையம் வனச்சரகத்தின் சிவசைலம் பிரிவுக்குட்பட்ட முள்ளிமலை பொத்தை பகுதியில் மிளா வேட்டையாடப்பட்டதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் தாலுகா வீராணம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் சுரேஷ் (26) மீது சந்தேகம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 15.08.2026 அன்று சுரேஷ் மீது கடையம் வனச்சரக உயிரின வனக்குற்ற வழக்கு எண் WLOR No.03/2026-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
துணை இயக்குநர் அன்பு, இ.வ.ப. (கூ.பொ.) உத்தரவின்படி,
கடையம் வனச்சரகர் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு சுரேஷை கைது செய்தனர்.
பின்னர் சுரேஷ் தென்காசி நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதைத் தொடர்ந்து, பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில் சுரேஷுடன் இணைந்து செயல்பட்டதாகக் கூறப்படும் மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வனப்பகுதிகளில் வன உயிரினங்களை வேட்டையாடுவது, அவற்றை கொல்வது மற்றும் அதுதொடர்பான காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரப்புவது உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் வனத்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ