Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை எண்ணூரில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் பல டன் கணக்கில் மீன்கள் உயிரிழந்து நீரின் மேற்பரப்பில் மிதப்பதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த சுற்றுச்சூழல் பேரழிவால் தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், காட்டுக்குப்பம் உள்ளிட்ட ஆறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பதால் மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் தவித்து வரும் மீனவர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், தொழிற்சாலை கழிவுகள் கலப்பதே இதற்கு காரணம் என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து, தாழங்குப்பம் நெடுஞ்சாலையில் மீனவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடனடியாக நீரின் தரத்தை ஆய்வு செய்து, மாசுபாட்டிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இறப்புக்கான காரணம் குறித்து மீன்வளத் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b