Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 16 ஆகஸ்ட் (ஹி.ச.)
காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டலுவுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வினாடிக்கு 4,500 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 8,000 கன அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதே இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் இந்த நீர் முழுமையாக தமிழக எல்லையை வந்தடையும் போது நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நீர்வரத்து வினாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு எடுக்கப்பட்ட இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், நீர்வரத்தின் அளவை பொறுத்து பரிசல் இயக்கத்திற்கான தடை நீட்டிக்கப்படவோ அல்லது தளர்த்தப்படவோ வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b