Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் பயனாளிகள் எண்ணிக்கை ஜூலை 2026 நிலவரப்படி 35.29 லட்சமாக உயர்ந்துள்ளதாக அத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள ஆதரவற்றோர், முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டம், இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டம், ஆதரவற்ற விதவைகள் உதவித்தொகை திட்டம், ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அடங்கும்.
கடந்த சில ஆண்டுகளாக தகுதியுள்ள பயனாளிகளை கண்டறிந்து சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டதன் காரணமாகவும், விண்ணப்ப நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு இ-சேவை மையங்கள் மூலம் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருவதன் காரணமாகவும் பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது பயனாளிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,200 உதவித்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் குடும்பங்களுக்கு கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணத்திற்கான நிவாரணத் தொகை உள்ளிட்ட துணைத் திட்டங்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், வரும் நிதியாண்டில் மேலும் தகுதியுள்ளவர்களை கண்டறிந்து இத்திட்டத்தின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b