Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அகத்தியர் அருவி மற்றும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று முதல் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு அகத்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை சார்பில் கடந்த 10 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தடை நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று காலை முதல் அகத்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதேபோல், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, அந்தத் தடையும் நேற்று முடிவுக்கு வந்தது.
இதையடுத்து, இன்று காலை முதல் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதனால், 10 நாட்களுக்குப் பிறகு அகத்தியர் அருவியில் குளிக்கவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்று வழிபடவும் அனுமதி கிடைத்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ