Enter your Email Address to subscribe to our newsletters

அம்பாசமுத்திரம், 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையாவுக்கு எதிராக சமூக வலைதளங்கள் மற்றும் பொது இடங்களில் 'Go Back' பிரச்சாரம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணைந்து, அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பை பெற்றதாகவும், இதனால் தொகுதி மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக “இசக்கி சுப்பையா திரும்பிச் செல்ல வேண்டும்”, “தொகுதி மக்களை அனாதையாக விட்டுவிட்டுச் சென்றவர்”, “அம்பை மக்களைச் சந்திக்க வெட்கமாக இல்லையா?” உள்ளிட்ட வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வெளியாகியுள்ளன.
முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அம்பாசமுத்திரம் தொகுதி மக்களின் பெயரில் இந்தப் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த எதிர்ப்பு பிரச்சாரத்தின் பின்னணியில் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் இருப்பதாகவும் சில தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இசக்கி சுப்பையாவுக்கு எதிராக வெளியாகி வரும் இந்தப் பதிவுகள் மற்றும் சுவரொட்டிகள் அம்பாசமுத்திரம் தொகுதியின் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.
Hindusthan Samachar / P YUVARAJ