Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடி வரும் ஆந்திராவைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ஸ்ரீ சரணி, தனது பட்டப்படிப்பை முடித்ததும் அரசு வேலை வழங்கப்படும் என்று மாநில கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் சட்டசபையில் அறிவித்தார்.
ஆந்திர சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் மெகா டி.எஸ்.சி. மற்றும் விளையாட்டு ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் நாரா லோகேஷ் பேசியதாவது:–
முதல்-அமைச்சர் உத்தரவு
மாநிலத்தில் விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும் பெரிய அளவில் ஊக்குவிப்பது எங்கள் அரசின் முக்கிய கொள்கையாகும். இளைஞர்கள் விளையாட்டை ஒரு தொழிலாக தேர்வு செய்ய வேண்டும். விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்.
இந்த கொள்கையின் அடிப்படையில், விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடி வரும் ஸ்ரீ சரணிக்கு, அவர் பட்டப்படிப்பை முடித்தவுடன் அரசு வேலை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, அவர் படிப்பை முடித்ததும் அரசு வேலை வழங்கப்படும்.
சிந்து, ஜோதி யர்ராஜிக்கும் வேலை
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு அரசு வேலை வழங்கியது எங்கள் அரசுதான். அவருக்கு நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
விரைவில் அவர் உறுதிப்படுத்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக உள்ளார்.
அதேபோல், வட ஆந்திராவைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஜோதி யர்ராஜியின் திறமையை அங்கீகரித்து, முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு உடனடியாக அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுத்தார். தற்போது ஸ்ரீ சரணிக்கும் அதேபோன்று அரசு ஆதரவு வழங்கப்படுகிறது.
முறைகேடு இல்லை
டி.எஸ்.சி. விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் நடைபெற்ற நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. நியமன நடைமுறை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மாநிலத்தில் ஏற்கனவே இருந்த 29 விளையாட்டுப் பிரிவுகள் 65 ஆக அதிகரிக்கப்பட்டன. அவை முன்னுரிமை-1, முன்னுரிமை-2 என பிரிக்கப்பட்டு, முதலில் முன்னுரிமை-1 பிரிவைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
விளையாட்டு சான்றிதழ்கள் ஆந்திரப் பிரதேச விளையாட்டு ஆணையமான ‘ஷாப்’ (SAAP) மூலம் சுமார் ஒரு மாத காலம் பல்வேறு கட்டங்களாக தீவிரமாக சரிபார்க்கப்பட்டன. இந்த நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னரே நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆந்திர கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் சான்றிதழ்களை வழங்கியதாகவும், அவை முறைகேடாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் அதை வெளியிட வேண்டும்.
விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் குறித்த சந்தேகங்களை போக்கி, அவர்களுக்கு அனைத்து வகையிலும் ஆதரவளிப்பதே அரசின் நோக்கம்.
இவ்வாறு அமைச்சர் நாரா லோகேஷ் கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA