Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திரபிரதேச சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரில் அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற நகைச்சுவையான உரையாடல், அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ.க.வை சேர்ந்த மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யகுமார் யாதவ், பா.ஜ.க. கட்சியின் துண்டை அணிந்தபடி சட்டசபைக்கு வந்தார். இதனை கவனித்த கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ், “சத்யகுமார் அவர்களே... நீங்கள் பா.ஜ.க.வை சேர்ந்தவர் என்பது உலகம் முழுவதும் தெரியும். உங்களுக்கு ஏன் தனியாக கட்சித் துண்டு?” என்று கேலி கலந்த தொனியில் கேட்டார்.
இதையடுத்து மூத்த அமைச்சர் கிஞ்சராபு அச்சென்னாயுடுவும் உரையாடலில் இணைந்தார். “தேசிய அளவில் பிரபலமான தலைவர்களில் சத்யகுமாரும் ஒருவர்” என்று அவர் கூறினார். இதனால் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடையே சிரிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து நாரா லோகேஷ், “எங்கள் கட்சியினருக்கும் கொஞ்சம் ஒழுக்கத்தை கற்றுக்கொடுங்கள்” என்று சத்யகுமாரிடம் சிரித்தபடி கூறினார். அப்போது அருகில் இருந்த தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர், “கட்சி முதலில்” என்று கூறினார்.
உடனே சத்யகுமார் யாதவ் புன்னகையுடன், “நாடு முதலில்... கட்சி அடுத்து... தனிப்பட்ட நலன் கடைசியில்” என்று பதிலளித்தார். அவரது இந்த பதில் அவையில் இருந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடையே வரவேற்பை பெற்றது.
கொள்கை சார்ந்த விவாதங்களால் வழக்கமாக பரபரப்பாக காணப்படும் சட்டசபையில், அமைச்சர்களுக்கு இடையிலான இந்த நகைச்சுவையான உரையாடல் சிறிது நேரம் சிரிப்பலையை ஏற்படுத்தியதுடன், கூட்டத்தொடரின் கவனத்தை ஈர்த்தது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA