Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் (TET) தேர்வில் இருந்து விலக்கு கோரி மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளிக்க சென்ற 5 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,
டெட் தேர்வில் இருந்து விலக்கு கோரி மத்திய அரசின் பிரதிநிதிகளை சந்தித்ததற்காக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தங்களது பிரச்சினையை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல முயன்ற ஆசிரியர்கள் செய்த குற்றம் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தபோது நடைமுறையில் இல்லாத டெட் தேர்வு விதி தற்போது அமல்படுத்தப்படுவதால், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மூத்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெகன் தெரிவித்துள்ளார்.
இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது எப்படி குற்றமாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆசிரியர்கள் மீதான இடைநீக்க நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்களிடம் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஜெகன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஆசிரியர்களை இடைநீக்கம் செய்தது பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு அரசு, டெட் தேர்வு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசிடம் உரிய முறையில் வலியுறுத்த வேண்டும் என்றும் ஜெகன் கூறியுள்ளார்.
சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல், தங்களது பிரச்சினையை மத்திய அரசிடம் எடுத்துச் சென்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் ஜெகன் விமர்சித்துள்ளார்.
இடைக்கால நிவாரணம் (ஐ.ஆர்.), ஊதிய திருத்தம் (பி.ஆர்.சி.) உள்ளிட்ட கோரிக்கைகள் நிலுவையில் இருப்பதுடன், பல அகவிலைப்படி தவணைகளும் வழங்கப்படாமல் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மீதான இந்த நடவடிக்கைக்கு எதிராக நடைபெறும் சட்டப்போராட்டத்தில் அவர்களுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்றும் ஜெகன் உறுதி அளித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA