கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - முன்னாள் சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்
சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.) கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தோமையார் பகுதியில் வனத்துறையினரால் தமிழர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் தம
Appavu


Nn


சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தோமையார் பகுதியில் வனத்துறையினரால் தமிழர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த கண்டன அறிக்கை அவர் தெரிவித்துள்ளதாவது,

தோமையார் பகுதியில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ தமிழ் மக்கள் விவசாயக் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர்.

சம்பவத்தன்று சமையலுக்குத் தேவையான காய்ந்த விறகுகளைச் சேகரிப்பதற்காக மலைப்பகுதிக்குச் சென்றவர்களை வனக்காவலர்கள் தவறான வார்த்தைகளால் திட்டி, கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இதில் இருவர் உயிரிழந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வனத்துறையின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட பின்னர், உயிரிழந்தவர்கள் உள்ளிட்ட சிலர் வனவிலங்கு வேட்டைக்கு வந்ததாகக் கூறி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தமிழர்கள் என்பதால், கர்நாடக காங்கிரஸ் அரசு இதுவரை கொலை வழக்குப் பதிவு செய்யவோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவோ, உரிய நிவாரணம் அறிவிக்கவோ முன்வரவில்லை என அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அப்பகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர் மஞ்சுநாத், உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் தலா ரூ.10 லட்சமும், அரசிடம் இருந்து ரூ.5 லட்சமும் பெற்றுத் தருவதாகக் கூறி, பிரச்சினையை முடித்துக்கொள்ள வேண்டும் என்ற தொனியில் பேசி சடலங்களைப் பெற்றுக்கொள்ள வைத்ததாகவும் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் உயிருக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்வதுடன், உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சரிடம் அப்பாவு வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ