Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
வங்கக்கடலில் வீசும் பலத்த சூறாவளிக் காற்று காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மண்டபம் வடக்கு மற்றும் தெற்கு மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்களுக்கு இன்று அனுமதிச்சீட்டு டோக்கன் வழங்கப்படாது என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி பகுதிகளில் இன்று காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்றும், சில நேரங்களில் 65 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே மறு உத்தரவு வரும் வரை மண்டபம், ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்பாக கட்டி வைக்கவும், மீன்பிடி உபகரணங்களை பத்திரப்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வானிலை சீரான பிறகு மீண்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b