Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 17 ஆகஸ்ட் (ஹி.ச)
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாட்டுப்புற மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு கடலில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்றும், கடல் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின் பேரில் மீன்வளத்துறை இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. குறிப்பாக ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, பொன்னாகரம் உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்புமாறு வானொலி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வைக்கவும், படகுகளை பாதுகாப்பாக கட்டி வைக்கவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மீனவ கிராமங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடல் சீற்றம் சீரான பிறகு மீண்டும் கடலுக்கு செல்லலாம் என்ற அறிவிப்பு வெளியாகும் வரை மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b