பீகாரில் சிவன் கோவிலில் கூட்ட நெரிசல்- 7 பேர் பலி
லக்கிசராய் , 17 ஆகஸ்ட் (ஹி.ச.) பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் சிவன் கோவிலில் சாவன் மாதத்தின் 3-வது திங்கட்கிழமையையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக திரண்டனர். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த
A


லக்கிசராய் , 17 ஆகஸ்ட் (ஹி.ச.)

பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் சிவன் கோவிலில் சாவன் மாதத்தின் 3-வது திங்கட்கிழமையையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக திரண்டனர்.

கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென மின்சார கம்பி ஒன்று அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மின்சாரம் தாக்கிவிடும் என்ற அச்சத்தில் பக்தர்கள் நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

அப்போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் பலர் சிக்கிக்கொண்டனர். ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நெரிசலில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4 பேர் அடையாளம்

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஹேமலதா தேவி, லலிதா தேவி, ரிங்கு தேவி மற்றும் மன்மலா தேவி ஆகிய 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மற்ற 3 பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

கோவிலில் பக்தர்கள் அதிகளவில் திரண்டிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால், அப்பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA