Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் , கல்லூரிக்கு வெளியில் சக மாணவர்களால் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர் அமுதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே போதை பொருள் குறித்து தகவல் அளித்ததால் மாணவன் படுகொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி அல்லது சிபிஐ விசாரணை வேண்டும் என மாணவனின் பெற்றோரும் சக மாணவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் மாணவனின் மரணத்திற்கு நீதி கேட்டு திமுக சார்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டது.
இது மட்டுமல்லாமல் பாஜக. நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இந்த விவகாரம் தொடர்பாக குரல் கொடுத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு சட்டசபை நான்கு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று தொடங்கியது.
இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கிய போது திருக்குறளுடன் அவையை தொடங்கி வைத்தார்
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக அரசு 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் நிலையில் முதலமைச்சரின் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அவர், 100 நாட்களில் தமிழக வெற்றிக்கழக அரசு செய்த சாதனைகளை எடுத்துரைத்தார்
கோவையைச் சேர்ந்த மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ செல்லசாமி வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த விவகாரத்தை எழுப்பிப் பேசிய அவர், கோவை மாணவன் அமுதனின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுவதாகவும், இதுகுறித்து காவல்துறை முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மாணவனின் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை வெளிக்கொண்டு வருவது அரசின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுவதற்குக் கூட சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் முன்வரவில்லை என்பது மிகுந்த வேதனையளிப்பதாக குற்றம்சாட்டினார்.
கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமே தவிர, இதுபோன்ற சம்பவங்களில் அலட்சியம் காட்டக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த வழக்கில் அரசு தலையிட்டு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதியும், இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / vidya.b