Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் வருகையின்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டுமா என்பது தொடர்பாக இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.
இதற்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் அளித்து விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வரும்போது உறுப்பினர்கள் வணக்கம் தெரிவிப்பது வழக்கமாக இருப்பதாக கூறிய அமைச்சர் ரமேஷ், முதலமைச்சர் 8 கோடி மக்களின் பிரதிநிதி என்பதால், அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் மரியாதை செலுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.
இதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்,
முதலமைச்சர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பது கட்டாயமான நடைமுறை அல்ல என்றும், அது அவரவர் விருப்பம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பேரவைத் தலைவர் வரும்போது உறுப்பினர்கள் எழுந்து நிற்பதுதான் மரபு என்றும், முதலமைச்சர் தனது இருக்கைக்கு சென்று வணக்கம் தெரிவிப்பதே நடைமுறை என்றும் கூறினார்.
மேலும், முதலமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டும் என்றால், எதிர்க்கட்சித் தலைவர் வரும்போதும் உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டப்பேரவைக்குள் முதலமைச்சர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பது கட்டாயமில்லை என்று தெரிவித்தார்.
முதலமைச்சருக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவது அவரவர் விருப்பம் என்றும், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் சபாநாயகர் தெளிவுபடுத்தினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam