Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
காஞ்சிபுரம் அருகே உள்ள படுநெல்லி பெருமாள் கோவிலில் திருவிழா நடைபெற்று வந்தது. நேற்று இரவு திருவிழாவின் போது கானா பாடல் போடுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சந்துரு மற்றும் நீலகண்டன் ஆகியோருக்கு இடையே தகராறு முற்றியதாக கூறப்படுகிறது.
சுவாமி ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகளின் போது, மதுபோதையில் இருந்த சிலர் ஒலிபெருக்கியில் கானா பாடல் போடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
இதற்கு மற்றொரு தரப்பினர் மறுப்பு தெரிவிக்கவே, இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போலீஸார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
போலீஸார் கலைந்து சென்ற பிறகு, நள்ளிரவு சுமார் 12 மணியளவில் நீலகண்டனும் சந்துருவும் தங்களது வீட்டின் அருகே உள்ள ஒரு காலி இடத்தில் அமர்ந்திருந்தனர்.
அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்மக் கும்பல், இருவரையும் அரிவாளால் துள்ளத் துடிக்க சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொன்னேரிகரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்ட போலீஸார், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.
இதனிடையே, கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி படுநெல்லி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
அசம்பாவிதங்களைத் தடுக்க படுநெல்லி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b