Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
மறைந்த முன்னாள் அமைச்சர் பி.எம். செங்குட்டுவன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது மகன்கள் உள்ளிட்ட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில், மருங்காபுரி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராகவும், கால்நடைத் துறை அமைச்சராகவும் பி.எம். செங்குட்டுவன் பதவி வகித்தார்.
அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.81 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பிலான சொத்துகளை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன், அவரது மகன்கள் எஸ். பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, மருமகன் ராஜலிங்கம் மற்றும் சகோதரரின் மகள் வள்ளி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்கு விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மற்றும் அவரது மருமகன் ராஜலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். இதையடுத்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் கைவிட்டது.
இதனைத் தொடர்ந்து, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செங்குட்டுவனின் இரு மகன்கள், மகள் மற்றும் சகோதரரின் மகள் ஆகிய நான்கு பேருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.2,000 அபராதமும் விதித்து திருச்சி நீதிமன்றம் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து எஸ். பன்னீர்செல்வம், சக்திவேல், மீனாட்சி மற்றும் வள்ளி ஆகிய நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திருச்சி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட வேண்டிய அவசியமில்லை எனக் கூறி, நான்கு பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதன் மூலம், சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு பேருக்கும் திருச்சி நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ