Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் பெத்லகேம் தனியார் நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த 21 வயது மாணவி, கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மாணவியை கல்லூரி முதல்வர் டார்ச்சர் செய்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஸ்லின் குக்கு (21), கருங்கல் பெத்லகேம் தனியார் நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரியில் மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆஸ்லின் கல்லூரிக்கு செல்போன் கொண்டு சென்றதாகவும், இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் ஷீஜா, சக மாணவிகள் முன்னிலையில் அவரை கண்டித்து கடுமையாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி விடுதியில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாகக் கூறி ஆஸ்லின் சக மாணவிகளை திரட்டி போராட்டம் நடத்தியதாகவும் தெரிகிறது. இதன் பின்னர் கல்லூரி நிர்வாகத்தால் மாணவிகளுக்கு பல்வேறு வகைகளில் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் மனமுடைந்த ஆஸ்லின், கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதில் கை, கால்கள் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த முறிவு ஏற்பட்டது. பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் கல்லூரி முதல்வர் ஷீஜா மற்றும் கல்லூரி நிர்வாகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதோடு, சம்பவத்தை மறைக்க முயன்றதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக கருங்கல் காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் மரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரதாப், ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் விசாரணை மற்றும் ஆர்.டி.ஓ. விசாரணையின் முடிவில் மாணவியின் மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam