Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம் , 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
கேரளத்தில் ஓணம் பண்டிகை வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இன்று (திங்கட்கிழமை) முதல் 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. ஓணம் பண்டிகையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக வீடுகளின் முன்பு அத்தப்பூ கோலம் இடுவது வழக்கம்.
இதனால், அத்தப்பூ கோலத்துக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு வண்ண மலர்களின் தேவை அதிகரித்து, அவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் முழுவதும் அஸ்தம் நட்சத்திர தினத்தையொட்டி அத்த சமய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.
வீடுகளில் பெண்கள், குழந்தைகள் ஆர்வத்துடன் அத்தப்பூ கோலம் போட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு வண்ண மலர்களை பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி வருகின்றனர்.
பூக்கள் விலை
அத்தப்பூ கோலத்துக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் ஆரஞ்சு நிற செண்டு மல்லி பூ கிலோ ரூ.150 முதல் ரூ.300 வரையும், மஞ்சள் நிற செண்டு மல்லி ரூ.150 முதல் ரூ.250 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளை நிற செவ்வந்தி கிலோ ரூ.500 முதல் ரூ.700 வரையும், நீல நிற செவ்வந்தி ரூ.400 முதல் ரூ.700 வரையும் விற்பனையாகிறது.
வாடாமல்லி கிலோ ரூ.250 முதல் ரூ.350 வரையும், அரளிப்பூ ரூ.450 முதல் ரூ.500 வரையும், சிவப்பு ரோஜா கிலோ ரூ.400 முதல் ரூ.600 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
பூக்களை தொடர்ந்து அத்தப்பூ அலங்காரத்துக்கு பயன்படுத்தப்படும் இலைகளின் விலையும் அதிகரித்துள்ளது. பன்னீர் இலை ஒரு கட்டு ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் அதிகரிக்கும்
ஓணம் பண்டிகையையொட்டி பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால், பெங்களூரு, கோவை, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு வண்ண மலர்கள் கொச்சிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இருப்பினும் சந்தையில் தொடர்ந்து தேவை அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே மல்லிகை பூவின் விலையும் உயர்ந்துள்ளது.
ஓணம் பண்டிகை நெருங்கும் நாட்களில் பூக்களின் தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால், விலை தொடர்ந்து உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA