Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 17 ஆகஸ்ட் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்திய அணுமின் கழகத்தின் சார்பில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அணு உலையானது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத, குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட பசுமை ஆற்றலை தொடர்ந்து வழங்கி வருவதில் முன்னணி வகிக்கிறது.
இந்த திட்டமானது ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் கட்டமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இங்கு தலா 1,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட முதல் மற்றும் 2-ம் அலகுகள் தற்போது வணிகரீதியாக தொடர் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.
தலா 1,000 மெகாவாட் திறன் கொண்ட 3 மற்றும் 4-ம் அலகுகளின் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
இவற்றின் எந்திரங்கள் மற்றும் உலை பாகங்கள் நிறுவும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. 5 மற்றும் 6-ம் அலகுகளின் அடித்தள கட்டுமானங்கள் மற்றும் சிவில் பொறியியல் பணிகள் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 2-வது அணு உலையில் நேற்று முன்தினம் திடீரென மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனை அறிந்து அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தினர்.
அவர்கள் பழுதுக்கான காரணத்தை பார்த்தபோது உலைக்குள் ஜெல்லி மீன்கள் புகுந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அணு உலையை நிறுத்தி ஜெல்லி மீன்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றது. அதன்பின்னர் மீண்டும் அணு உலை நிறுத்தப்பட்டது. இதனால் 1 நாள் முழுவதும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,
2-வது அணு உலைக்குள் நேற்று முன்தினம் ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாக புகுந்து விட்டது. அணு உலைக்கு அருகில் கடலில் பிரத்யேக குழாய்கள் அமைக்கப்பட்டு, சக்தி வாய்ந்த மோட்டார்கள் மூலம் கடல் நீர் பெருமளவில் ஈர்க்கப்படுகிறது.
அதனை வடிகட்ட வலை போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜெல்லி மீன்கள் அதனையும் கடந்து கூட்டம் கூட்டமாக புகுந்ததால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
ஆனால் சில மணி நேரங்களில் பணிகள் முடிந்த மின் உற்பத்தி தொடங்கப்பட்டதாக தெரிவித்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN